மாணவர்களை டாய்லெட் கழுவ வைத்த தலைமை ஆசிரியை .. சஸ்பெண்ட்!

Share this :
No comments

அரியலூர்: அரியலூர் அரசு பள்ளியில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கழிப்பறைகளைக் கழுவ வைத்த தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் சாலையக்குறிச்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

புனிதவதி என்பவர் இப்பள்ளியின் தலைமையாசிரியையாக பணி புரிந்து வருகிறார். தினமும் பள்ளிக்கு தாமதமாக வருகிறார், மாணவர்களுக்கு சரியாக வகுப்பெடுப்பதில்லை உள்ளிட்ட பல புகார்கள் இவர் மீது உண்டு.

மேலும், மாணவ - மாணவிகளை வைத்தே பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறையை சுத்தப்படுத்தி வந்துள்ளார் புனிதவதி. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த புனிதவதி மாணவர்களை கழிவறையையும், வகுப்பறைகளையும் சுத்தம் செய்யும்படி கட்டாயப் படுத்தியுள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புனிதவதியை இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் தலைமையாசிரியை புனிதவதியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த விஜயலட்சுமி, அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து சமாதானமடைந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளியில் விட்டுச் சென்றனர். புனிதவதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதுவரை உதவி தலைமையாசிரியராக இருந்த திரிநிஷாபால் தலைமையாசிரியராக தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.



No comments :

Post a Comment