பொது இடத்தில் வாலிபரை தாக்கிய சூர்யா
அடையாறு மேம்பாலத்தில் நடிகர் சூர்யா, வாலிபர் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சக நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்றார்.
அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று ‘பிரேக்’ போட்டதால், அந்த கார் மீது பிரவீண்குமார் மோதிவிட்டார். அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.
இதனால் கார் உரிமையாளரான அந்த பெண்ணுக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த வழியாக நடிகர் சூர்யா தன்னுடைய காரில் வந்தார். நடுரோட்டில் அந்த பெண்ணும், பிரவீண்குமாரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்த்த சூர்யா, காரை விட்டு கீழே இறங்கி வந்தார்.
பிரச்சினை குறித்து கேட்டறிந்த அவர், பிரவீண்குமாரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அதற்குள் அந்த பகுதியில் சுற்றி இருந்தவர்கள் நடிகர் சூர்யாவை பார்த்து, செல்போனில் படம்பிடிப்பதற்காக அங்கே கூடினார்கள்.
இதையடுத்து, நடிகர் சூர்யா அங்கிருந்து தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். கன்னத்தில் அடிவாங்கிய பிரவீண்குமார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், நடிகர் சூர்யா எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என்னை பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்றும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்து இருக்கிறார்.
இந்த சம்பவத்தால் அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Labels:
cinema news
No comments :
Post a Comment