நகை கடையாக வலம் வரும் சாமியார் : பாதுகாப்பு கேட்டு மனு
ரு..3 கோடி மதிப்புடைய தங்க நகைகளை தன் உடலில் அணிந்து வலம் வரும் சாமியார் ஒருவர், நகைகளுக்கு பாதுகாப்பு கேட்டு ஆக்ரா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த அவரை “தங்க பாபா” என்றுதான் மக்கள் அழைக்கின்றனர். கழுத்தில் வடம் போன்ற செயின், அட்டிகை, ஆரம், சரடுகள், இரு கைகளின் எல்லா விரல்களிலும் பெரிய பெரிய மோதிரங்கள் என அவர் தன்னுடை உடலில் விதவிதமான தங்க நகைகளை அணிந்து வலம் வருகிறார். மேலும், தன்னுடைய காரில் ஏராளமான கடவுள் சிலைகளையும் எடுத்து செல்கிறார்.
சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்ட அவர், தற்போது உத்திரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
உத்திரப்பிரதேசம் கொலை, கொள்ளைகள் அதிகமாக நடக்கும் மாநிலம் ஆகும். தற்போது ஆக்ரா வந்துள்ள தங்க பாபா, பரேலிக்கு செல்ல விரும்புவதாகவும், தனக்கும், தான் அணிந்துள்ள நகைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.
தங்கம் என்பது கடவுளின் வடிவம். அதை நான் அணியும் போது, என் மனம் அமைதி அடைகிறது. அதனால், 1972ம் ஆண்டு முதல் தங்க நகைகளை அணிய தொடங்கினேன் என அவர் செய்தியாளர்களிடம் கூறுகிறார் தங்க பாபா.
Labels:
News
,
other
No comments :
Post a Comment