அரபிக்கடலில் ஈரக்காற்று... தென்மேற்கு பருமழை ஜூன் 9 முதல் தொடங்கும்- வானிலை மையம்

Share this :
No comments

சென்னை: தென்மேற்குப் பருவமழை நாளை மறுநாள் கேரளாவில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடல் பகுதியில் ஈரப்பதக் காற்று அதிகரிப்பதால் பருவ மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக கூறிய பாலச்சந்திரன், தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் என்று கூறினார். கேரளா மாநிலத்தில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும்.

கேரளாவில் தொடர்ச்சியாக பெய்யும் மழையால் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் உயரும். குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இன்னும் 48 மணி நேரத்தில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வட தமிழகத்திலும், தென் தமிகத்திலும் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்ரம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றார். தெற்கு அரபிக்கடலில் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வலுவடையக்கூடிய நிலையில் உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் குமரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கும். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

குலசேகரம், திருவட்டார், பொன்மனை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் இனிவரும் நாட்களில் அணைகளுக்கு கணிசமான நீர் வரத்து இருக்கும் என்று விவசாயிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



No comments :

Post a Comment