அறிமுக இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் சுந்தர் சி, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ், சிங்கம் புலி, சதீஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் முத்தின கத்திரிக்கா. மலையாளத்தில் வெளிவந்த வெளிமூங்க என்ற படத்தின் ரீமேக்கான இந்த படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்திருகிறார் இயக்குனர்.
சுந்தர் சி-யின் தந்தையும், தாத்தாவும் அரசியலில் பிரபலமாக வேண்டும் என முயன்று, அது முடியாமல் போனது. அதனால் சுந்தர் சி-யை அரசியல் வாடை படாமல் வளர்க்கிறார் அவரது அம்மா. ஒரு நாள் வேஷ்டி சட்டை அணிந்து ஊரில் நடந்து வரும் போது அவருக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து சுந்தர் சி-க்கு அரசியல் ஆர்வம் வருகிறது.
இதனால் அரசியலில் சாதிக்க வேண்டும் என ஒரு கட்சியில் சேர்கிறார் சுந்தர் சி. இவருக்கு அரசியல் எதிரியாக இருப்பவர்கள் அண்ணன் தம்பியான சிங்கம் புலி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர். சிங்கம் புலி, விடிவி கணேஷ் இருவரும் சகோதரர்களாக இருந்தாலும் எதிரெதிர் கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் செய்யும் நல்ல விஷயங்களை மக்களிடையே விளம்பரம் செய்ய முயற்சிக்கும் போது இடையில் சுந்தர் சி புகுந்து அந்த புகழை தட்டி செல்கிறார்.
இப்படி இருக்கும் போது ஒரு நாள் நாயகி பூனம் பாஜ்வா மீது முதல் பார்வையிலையே காதல் வசப்படுகிறார் 40 வயதான சுந்தர் சி. பூனம் பாஜ்வாவை திருமணம் செய்ய பொண்ணு கேட்டு அவர் வீட்டுக்கு செல்லும் போதுதான் படத்தில் முக்கியமான டுவிஸ்ட் வைக்கிறார் இயக்குனர்.
பொண்ணு கேட்க போகும் இடத்தில் பூனம் பாஜ்வாவின் அப்பாவாக வருபவர் சுந்தர் சி உடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர். தன்னுடன் படித்தவனே தன் பொண்ணை கேட்டு வந்ததால் ஆத்திரப்படும் பூனம் பாஜ்வாவின் அப்பா, நீ அரசியலில் பெரிய ஆளாக வா, அப்புறம் என் பொண்ண உனக்கு கட்டி தாரேன் என அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
இதனையடுத்து வரும் தேர்தலில் சிங்கம் புலி, விடிவி கணேஷ் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கும் சுந்தர் சி தேர்தலில் வெற்றி பெற்றாரா, பூனம் பாஜ்வாவை திருமணம் செய்தாரா என்பதே படத்தின் மீதி கதை.
காமெடி கலந்த அரசியல் கதையை தந்திருக்கும் அறிமுக இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது. சும்மாவே காமெடி படம் எடுக்கும் சுந்தர் சி இந்த காமெடி படத்தில் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். சேலையில் வரும் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் போதுமான அளவு தந்திருக்கிறார்.
முக்கியமாக சுந்தர் சி உடன் இருக்கும் சதீஷ் வயதை வைத்து சுந்தர் சி-ஐ கலாய்க்கும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. சிங்கம் புலி, விடிவி கணேஷ் காமெடி கலந்த வில்லனாக வருவது படத்திற்கு கூடுதல் பலம். சித்தார்த் விபினின் இசை சொல்லும்படியாக இல்லை என்றாலும், குறை சொல்ல முடியாத அளவுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பானு முருகன் காட்சிகளை கலர்புல்லாக தந்திருக்கிறார். முதல் படத்திலேயே நல்ல காமெடி படம் தந்திருக்கும் இயக்குனர் வெங்கெட் ராகவனிடம் வரும் காலங்களில் மேலும் நல்ல காமெடி படங்களை எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் முத்தின கத்திரிக்கா “முத்தான கத்திரிக்கா”
ரேட்டிங்: 3/5
No comments :
Post a Comment