பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் : ராமதாஸ்

Share this :
No comments


பொது இடங்களில் புகைப்பிடிக்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த சட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த விஷயங்களிலும் மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் கண்டனம் சரியான நேரத்தில் கற்பிக்கப்பட்ட சரியான பாடமாகும்.

சென்னையில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க சென்னை மாநாகராட்சிக்கு ஆணையிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்திருக்கிறார். ‘‘ சமூகத்தை பாதிக்கும் பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து மத்திய அரசு தடை விதித்திருந்தும் அது தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்படவில்லை’’ என்று கூறிய நீதியரசர், இதற்காக இந்த வழக்கில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரை பிரதிவாதிகளாக தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும் அறிவித்திருக்கிறார். புகைத் தடையை செயல்படுத்தாதது குறித்து இருவரும் 2 நாட்களில் விளக்கம் அளிக்கவும் ஆணையிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் இச்செயல் துணிச்சலானது; பாராட்டத்தக்கது.

மது, புகை, போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்கள் மனிதர்களை பாதிக்கின்றன என்றாலும், பயன்படுத்துபவர்களை விட மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது புகைப்பழக்கமாகும். சாலைகள், பெட்டிக்கடைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் பலரும் புகைப்பிடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் நச்சுப்புகை கலந்த காற்றை சுவாசிக்கும் பொதுமக்கள் பலரும் பல வகையான உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பா.ம.கவைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். பல மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பொருளாதார வலிமையும், அரசியல் பின்னணியும் அதிகமுள்ள புகையிலை லாபி உள்ளிட்ட அதிகாரவர்க்கத்தினரின் எதிர்ப்புகளையெல்லாம் முறியடித்து இச்சட்டத்தை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கொண்டு வந்தார்.

இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட விதி 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி பிறந்த நாள் முதல் இவ்விதி செயல்பாட்டிற்கு வந்தது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள், தனியார் அலுவலங்கள், தொழிற்சாலைகள் என பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே செல்லும் அனைத்து இடங்களிலும் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதி நடைமுறைக்கு வந்த பின்னர் சில மாதங்கள் மட்டுமே தமிழகத்தில் பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்கள் மீது தண்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விலகிய பின்னர் இச்சட்டம் பின்பற்றப்படுவதில்லை. இதற்காக மத்திய அரசோ, மாநில அரசுகளோ சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தான் சோகம்.

பொது இடங்களில் புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்பட்ட வரை பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பொது இடங்களில் முகம் சுழிக்காமல் சுதந்திரமாக நடமாட முடிந்தது. ஆனால், இச்சட்டத்தை ஆட்சியாளர்கள் இப்போது செயல்படுத்தாத நிலையில் பொது இடங்களில் நடமாடும் பெண்களும், குழந்தைகளும் மூக்கை பிடித்தவாறும், முகத்தை மூடியபடியும் தான் செல்ல வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் சாலைகளில் செல்வோர் முகத்தில் படும்படி விடப்படும் புகையை சுவாசிக்கும் மூத்த குடிமக்கள் உடனடியாக நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இப்பாதிப்புகளை தடுக்கும் வகையில் பொது இடங்களில் புகைப்படிக்க தடை விதிக்கும் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தும்படி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். உலக புகையிலை நாள் கடந்த மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டதையொட்டி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அறிக்கையிலும் இதை வலியுறுத்தியிருந்தார். ஆனால், இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளவில்லை.

பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மார்பகப்புற்றுநோய், ஆஸ்த்துமா, குறைப்பிரசவம், குழந்தைகளுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஆறு லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அவர்களில் குறைந்தது ஒரு லட்சம் பேர் இந்தியர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகும், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் உண்மைகளுக்கு பிறகுமாவது பொது இடங்களில் புகைப் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாட்டில் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். அதுதான் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இச்சட்டத்தை செயல்படுத்தாத பாவத்திற்கு ஆட்சியாளர்கள் செய்யும் பரிகாரமாக இருக்கும்.

No comments :

Post a Comment